shrx
  [email protected]      +91 7010252049

எல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்!

எல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்!
By: med Posted On: January 01, 1970 View: 14

எல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்!

நன்றி குங்குமம் டாக்டர்

டயட்

‘இந்தியாவை வடிவமைப்பவர்’ என்று செல்லமாகக் குறிப்பிடப்படுபவர் டயட்டீஷியன் ருஜூதா திவாகர். அனில் அம்பானி முதல் கரீனா கபூர் வரை இந்தியாவின் டாப் மோஸ்ட் பிரபலங்கள் எப்போது, என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பவர் இவர்தான்.

சர்வதேச அளவில் அதிகம் பின்பற்றப்படுகிறவர்களின் ஊட்டச்சத்து நிபுணரான ருஜூதாவின் புத்தகங்களும், டயட் பற்றிய வீடியோக்களும் எப்போதும் பலத்த வரவேற்பைப் பெறுபவை. உணவுத்துறையில் 20 ஆண்டுக்கும் மேலான அனுபவம்மிக்க ருஜூதா திவாகர், ‘குங்குமம் டாக்டர்’ வாசகர்களுக்காக அளித்த பேட்டி இது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் வாழும் பல சாதாரண நடுத்தர குடும்பங்களில் ஒன்றுதான் என்னுடைய குடும்பமும். வீட்டில் உள்ள அனைவருமே யோகாவையும், ஆரோக்கியத்தையும் தங்கள் வாழ்வியலில் இயல்பாக கடைபிடிக்கும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கும் யோகா பயிற்சிகளை வழங்கி வருபவர்கள். இதுவே எனக்கு உந்துதலாக இருந்தது.

சிவானந்த யோக வேதாந்த அகாடமியில் ஆயுர்வேதத்துடன் யோகாவை இணைந்து படித்தேன். ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி அறிவியலில் கற்றுக்கொண்டவற்றை, இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்தி அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறேன். என் வாழ்வுள்ள வரை இன்னும் கற்றுக் கொள்வது தொடரும்.

மக்களிடம் இருக்கும் உணவு சம்பந்தமான சந்தேகங்களுக்கு முதலில் தெளிவு பெற வேண்டும். நீங்கள் சாப்பிடுவதைப் பொறுத்தே உங்கள் மனநிலை இருக்கும். மேலும் பசி என்பது உங்கள் மனநிலைக்கேற்ப நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அப்படி இருக்கும்போது, நீங்கள் சாப்பிட
வேண்டிய உணவையும், அதன் அளவையும் மற்றொருவர் எப்படி தீர்மானிக்க முடியும்? என்ன சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உங்கள் கையில் இருக்கிறது என்பதை முதலில் உணருங்கள்.

நான் இப்போது சொல்லும் ‘Super Foods’ வகைகள் உங்கள் தட்டில் ஒவ்வொரு நாளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவை, இன்று எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படும் அத்தனை நோய்களுக்கும் மருந்தாக செயல்படக் கூடியவை.

அரிசி

எந்தவித பயமும் இல்லாமல், அதனுடைய எல்லா மகிமையையும் மீண்டும் நம்முடைய தட்டில் கொண்டு வர வேண்டிய முதல் உணவு,  அரிசி. குழந்தையாக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் உணவான இது, எளிதில் செரிமானமடையக்கூடியதும், கார்போஹைட்ரேட்டைத் தவிர அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன. குறிப்பாக இந்த அமினோ அமிலங்களின் கிளைச் சங்கிலியான BCCAA உடலின் கொழுப்பை எரிக்க உதவுபவை.

நம் உடல், மனம் இரண்டிலும்  ஏற்படும் சேதங்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும். உதாரணத்திற்கு, மன அழுத்தம் நிறைந்த நாளாக இருந்தால், அன்று கண்டிப்பாக பருப்பு சாதம் சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் நம்ப முடியாத அளவு அமைதியடையும். எந்த அரிசி சாப்பிடுவது என்பது இன்று அனைவருக்கும் குழப்பம் தரக்கூடிய கேள்வி. நீங்கள் விரும்பும் அரிசியை சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் விரும்பாத அரிசியை சாப்பிட்டால், கண்டிப்பாக அதை செரிக்க உங்கள் உடல் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதன் விளைவாக வயிற்றில் எரிச்சல், அழற்சி ஏற்படும்.

வெல்லம்

நம் பாரம்பரிய இனிப்புகள் எல்லாமே வெல்லம் சேர்க்கப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. மெலிந்த மற்றும் உறுதியான உடல் பெறுவது என்பது, நாம் சாப்பிடும் வெல்லத்தைப் பொறுத்திருக்கிறது. திட அல்லது திரவம் என ஏதேனும் ஒரு வடிவத்தில் வெல்லம் உடலினுள் செல்வது மிக மிக முக்கியம். (சர்க்கரை பாலீஷ் செய்யாத வரை நல்லதே.) வெல்லம் சூட்டையும், சர்க்கரை குளிர்ச்சியையும் தரக்கூடியது  என்பதால், ஒன்றை மற்றொன்றுக்கு மாற்றாக பயன்படுத்தாமல் இருப்பது முக்கியம்.

நெய்

இன்றைய இளையவர்கள் குண்டாகி விடுவோம் என்று நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், சீஸ், பனீர் என்று ஒரு கட்டுக் கட்டுகிறார்கள். இது ஒரு மூட நம்பிக்கை. உண்மையில் நெய் எடையிழப்பை துரிதப்படுத்துகிறது. நியூயார்க்கில் Clarified butter என்ற பெயரில் நம்முடைய பாரம்பரிய நெய்யினை துணை ஊட்டச்சத்து உணவாக மருந்துக் கடைகளில் விற்கிறார்கள்.

நாட்டுப்பசு அல்லது எருமை மாட்டிலிருந்து பெறப்படும் நெய்யில் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தக்கூடிய மற்றும் இதயத்தை பாதுகாக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நம்மை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது, மூட்டுகள், நகங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது. சருமத்தில் ஏற்படும் பருக்கள், திட்டுகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. குழந்தை பிரசவித்த பெண்கள் எந்த அளவிற்கு நெய்யை எடுத்துக் கொள்கிறார்களோ, அந்த அளவு பிந்தைய நாட்களில் உடல் மெலிவை அடைவார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக நெய்யில் நல்ல கொழுப்பு உள்ளது. உடலுக்குத் தேவையான வைட்டமின் D-ஐ ஒருங்கிணைக்க உதவுகிறது. வைட்டமின் D குறைபாடுள்ள ஒருவருக்கு புற்றுநோய்க்கு வழி வகுக்கும். நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவிலும் நெய்யை சேர்த்துக் கொள்வது நல்லது.

தேங்காய்

நம் நாட்டில் எந்தவொரு முக்கிய நிகழ்வுகளிலும் தேங்காய் உடைத்துவிட்டுத்தான் வேலையையே தொடங்குவோம். நம் சமையலிலும் அதுதான் முதன்மை இடம் பெறுகிறது. ஆனால் இன்றோ தேங்காய் எண்ணெயின் இடத்தை ஆலிவ் ஆயில் பிடித்துக் கொண்டது. ஆலிவ் ஆயில் உபயோகத்தை பொருளாதார அந்தஸ்தாக நினைக்கிறார்கள். ஆனால், தேங்காய் நம் உடலுக்கும், மூளைக்கும் அளவற்ற ஆற்றலையும், மனதிற்கு அமைதியையும் கொடுப்பது. அனைத்து ஹார்மோன் குறைபாடுகளையும் நீக்கி ஒல்லியான இடுப்பை பெற முடியும்.

மசாலாப் பொருட்கள்

மேற்கத்திய நாடுகள் மசாலாப் பொருட்களுக்காகத்தான் இந்தியா மீது படையெடுத்தன என்றால் அவற்றின் முக்கியத்தை உணர முடியும். நாம் சமையலில் சேர்க்கும் அனைத்து மசாலாப் பொருட்களிலுமே புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் மற்றும் கொழுப்பு எரிபொருட்கள் நிறைந்துள்ளன.

நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகின்றன. நம் நாட்டில் எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காகவே அதன் மதிப்பை உணராமல், அதற்கு பதிலாக மேற்கத்திய மாற்றீடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நாம் மாறி வருகிறோம். நம் பாரம்பரிய பொருட்களுக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது. எல்லா வகையிலும் மருத்துவ குணங்கள் நிறைந்த நம் உணவுக் கலாச்சாரத்தை என்றுமே விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ஐந்து சூப்பர் உணவுகளும் கட்டாயம் உங்கள் ஒவ்வொரு வேளை உணவிலும் இருக்க வேண்டியவை.

நீரிழிவு நோயாளிகளுக்கான பழங்கள் எவை?

நீரிழிவு நோய் இருந்தால் மாம்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், சப்போட்டா என எல்லா பழங்குடியின பழங்களையும் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் ஆப்பிள், கிவி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா? நம் நாட்டுப் பழங்களிலிருந்து ஃப்ரக்டோஸ்(Fructose) கிடைத்தால் அது சரியில்லை, அதுவே வெளிநாட்டுப் பழங்களிலிருந்து ஃப்ரக்டோஸ் எடுத்தால் அது சரி என்று சொல்வது போல் இருக்கிறது.

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உள்ளூர் பழங்களில் குறைந்த அளவு பூச்சிக்கொல்லிகளே தெளித்திருப்பார்கள். ஆனால், தொலை தூர இடங்களிலிருந்து நீண்ட நேரம் பயணித்து இறக்குமதி செய்யப்படும் கிவி, பெர்ரி பழங்களில் அவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தால் நிச்சயம் பதப்படுத்திகளும், பூச்சிக்கொல்லிகளும் கலக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து உள்ளூர் பொருட்களே ஆரோக்கியமானவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மெலிந்த, உறுதியான உடலைக் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் தங்கள் உடல் ஆற்றலுக்கு வாழைப்பழத்தைத்தான் நம்புகிறார்கள். இது தசைகளுக்கு மட்டுமல்ல, சோர்வுற்ற மூளைக்கும் கூட ஆற்றல் தரக்கூடியது.  அலுவலகம் முடிந்து வீடு செல்லும்போது ஏற்படும் சோர்வை நீக்க அந்த நேரத்தில் வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டுப் பாருங்கள். உடனடி ஆற்றல் கிடைத்து சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்.

முதிய தோற்றத்தை மாற்றியமைக்கவும், உடல் கொழுப்பை குறைக்கவும், வயிறை சுத்தப்படுத்தவும் மற்றும் தைராய்டு கட்டியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பலாப்பழம் எப்படி பயன்படுகிறது என்பதை நாம் உணரவில்லை. நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டக்கூடிய மந்திர சக்தி  பலாப்பழத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது. இன்று முக்கனிகளான மா, பலா, வாழை பழங்களின் மருத்துவ மகிமையை நீரிழிவு நோய்க்கு எதிரானது என்ற ஒற்றைச் சொல்லில் மறக்கடிக்கப் பார்க்கிறார்கள்.

நட்ஸ்.... எது நல்லது?

நம் தேசப்பிதாவான மஹாத்மா காந்தி சாப்பிட்ட வேர்க்கடலையின் அருமை தெரியாமல் எல்லோரும் பாதாம், பிஸ்தா, வால்நட் என்று,  மாய வலையில் விழுந்து கிடக்கிறோம்.  இதை உலகின் ஆரோக்கியமான உணவு என்று சொல்லலாம்.  வைட்டமின்கள் B, E மற்றும் நுண்ணிய தாதுக்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை உங்கள் வீட்டு செல்லங்களுக்கு ஒரு முழுமையான உணவு.  முதியவர்களின் இதய ஆரோக்கியத்துக்கும் சிறந்தது வேர்க்கடலை. எளிதில் கைக்கு அடக்கமான விலையில் கிடைக்கும் நம்மூர் வேர்க்கடலையைவிட, வேறு எந்த நட்ஸும் சிறந்ததாக இருக்க முடியாது.

பால் நல்லதா? கெட்டதா?

கடந்த சில வருடங்களாக பால் கெட்டது, கொழுப்பு நிறைந்தது என்று சொல்லி அதை அழித்துவிட்டு அதற்கு மாற்றாக சோயா போன்று வேறு பொருட்களை அதிசயமாக்கப் பார்க்கிறார்கள். இயற்கையாகவே பாலில் அதிகமாக இருக்கும் CLA உள்ளடக்கம் எலும்புகளுக்கு மட்டுமல்ல, தோலில் ஏற்படும் சுருக்கத்தையும் தவிர்க்க உதவுகிறது. வைட்டமின் D. கரையும் கொழுப்பு போன்ற முக்கியமான சத்துக்கள் பாலில் இருக்கிறது. கொழுப்பிற்காக பாலை தவிர்த்தால் வைட்டமின் D குறைபாடு நிச்சயம் வரும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பால் மிக மிக அவசியம்.

உடற்பயிற்சி

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தில் உணவு விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நீங்கள் அணிய வேண்டிய சீட் பெல்ட்தான் உடற்பயிற்சி’. உண்மையில் நம் கனவு காணும் உடலை அடைய சரியான உணவை, சரியான நேரத்தில் உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம் உடலுடன் குறிப்பாக நமது வயிற்றுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியம். உடற்பயிற்சி மட்டுமே நம் வயிற்றுடன் தொடர்பு கொள்கிறது. உடற்பயிற்சி நமது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

செரிமானத்திற்கான நெருப்பைத் தூண்டி, குடலை பலப்படுத்துகிறது. கண்ணில் கண்டவற்றை சாப்பிட்டு வயிற்றை அடைப்பதைத் தடுக்கிறது; கொழுப்பாக சேமிப்பதற்குப் பதிலாக உணவில் இருந்து கலோரிகளை கிரகித்துக்கொள்ள நம் உடலுக்கு பயிற்சியளிக்கிறது, மிக முக்கியமாக நமது பசி சமிக்ஞைகளுடன் தொடர்பு கொள்ள வைக்கிறது.

உடலுக்கு வேலை கொடுக்கும்போது, உங்கள் பசி சமிக்ஞையுடன் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு, அடிக்கடி சாப்பிடுவீர்கள், சிறியதாக சாப்பிடுவீர்கள், சரியாக சாப்பிடுவீர்கள். இதுதான் உண்மையில் டயட் என்ற வார்த்தைக்கான அர்த்தம். உடற்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் பல இருந்தாலும், உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை உடற்பயிற்சி உங்களுக்கு கற்றுத்தருகிறது. உடற்பயிற்சி என்றால் ‘ஜிம்’மில் பளு தூக்கி கடுமையான பயிற்சிகள் செய்ய வேண்டுமென்பதில்லை.  உடல் தசைகளை குறிப்பாக வயிற்றுத் தசைகளை இயங்க வைக்கும் மிதமான யோகா பயிற்சிகள் செய்தாலே போதும்.

- உஷா நாராயணன்

Read this on med Ad1
  Contact Us
  Mumin Media.

Chennai, Tamilnadu, India

Tel : +91 7010252049
Mail : [email protected]
Business Hours : 9:30 - 5:30

  Follow Us
Site Map
Get Site Map
  About

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Excepturi, dolores, quibusdam architecto voluptatem amet fugiat nesciunt placeat provident cumque accusamus itaque voluptate modi quidem dolore optio velit hic iusto vero praesentium repellat commodi ad id expedita cupiditate repellendus possimus unde?